ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலுக்கு ஆதரவா? குஷ்பு விளக்கம்
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் விஷாலுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை,
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் விஷாலை குஷ்பு ஆதரிப்பதாக வெளியான தகவலால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
“ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆதரவு என்று சொல்லவில்லை. வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. விஷால் எனது நண்பர் என்பதால் வாழ்த்தினேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஷாலும் வரலாம். அவரும் இந்த நாட்டின் குடிமகன் தான்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உள்பட பலர் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்கள் அரசியலுக்கு வந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது தான் எனது கருத்து. ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதை அவர்கள் செய்வார்கள்”
இவ்வாறு குஷ்பு கூறினார்.