தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்ற போதிலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2017-11-15 22:45 GMT

சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மண்டலமாக மாறியபோதிலும் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும், இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த(அக்டோபர்) மாதம் 27–ந் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் காரணமாக நாகப்பட்டினத்தில் இதுவரை பெய்ய வேண்டியதைவிட 65 சதவீதம் அதிகமாகவும், சென்னை மாவட்டத்தில் 55 சதவீதம் அதிகமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 சதவீதம் அதிகமாகவும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 39 சதவீதம் அதிகமாகவும், கடலூர் மாவட்டத்தில் 27 சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 56 சதவீதம் குறைவாகவும், சிவகங்கை மாவட்டத்தில் 54 சதவீதம் குறைவாகவும், திருச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் குறைவாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 48 சதவீதம் குறைவாகவும், விருதுநகர் மாவட்டத்தில் 45 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் இதன் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. வியாழக்கிழமை (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இதே வானிலை தான் 19–ந் தேதி வரை நிலவும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

தஞ்சாவூர் 7 செ.மீ., வாழப்பாடி, ஆடுதுறை, வேம்பாவூர், திருவையாறு தலா 5 செ.மீ., பெரம்பூர், திருக்காட்டுப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர், துறையூர், வல்லம் தலா 4 செ.மீ., மங்களாபுரம், சங்கராபுரம், ஏற்காடு, ஜெயங்கொண்டம், ஆத்தூர் தலா 3 செ.மீ., ஓமலூர், ஒரத்தநாடு, கும்பகோணம், செங்குன்றம், வலங்கைமான், செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்), மன்னார்குடி, குடவாசல், சோழவரம், முத்துப்பேட்டை, தாத்தையங்கார் பேட்டை, மதுக்கூர் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 25 இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்