கிரீன் டீ எஸ்டேட்டில் 800 தொழிலாளர்கள் மூலம் ரூ.16 கோடி கருப்பு பணம் மாற்றமா?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட் உள்ளது.

Update: 2017-11-10 20:17 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட் உள்ளது. இங்கு நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை 7.30 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எஸ்டேட் தொழிலாளர்கள் 800 பேர் மூலம் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.16 கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, மாற்றப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மணல் அதிபர் ஆறுமுகசாமி வீட்டில் 2-ம் நாள் சோதனை

கோவை தொழில் அதிபரும், மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்த ஆறுமுகசாமியின் வீடு ரேஸ்கோர்சில் உள்ளது. அங்கும், கோவை ராம் நகர், அவினாசி சாலை வணிக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடந்தது.

இதுதவிர மர வியாபாரி சஜீவன் வீடு மற்றும் ஷோரூம்களிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்