வருமான வரி அதிகாரிகளுடன் விவேக் உறவினர்கள் வாக்குவாதம்

100 பவுன் நகையை திரும்ப தரும்படி கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் விவேக்கின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-11-11 05:30 IST
சென்னை,

தங்களுக்கு சொந்தமான 100 பவுன் நகையை திரும்ப தரும்படி கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் விவேக்கின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் வீடு, சென்னை அண்ணாநகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு ஆகியவையும் உள்ளடங்கும்.

நேற்று 2-வது நாளாக இந்த சோதனை பல இடங்களில் நடந்தது. பாஸ்கர் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 9 மணிக்கு வந்தனர். நேற்று முன்தினம் பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பாஸ்கர் மற்றும் அவரது மகனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நகைகளில் 100 பவுன் நகை தனது மனைவியின் சகோதரி சித்ராவுக்கு சொந்தமானது என்றும், அவர் கொளத்தூரில் வசித்து வருவதாகவும் பாஸ்கர் கூறினார். மேலும், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் சித்ராவின் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியதால் அவர் வீட்டில் இருந்து வெளியேறி தங்களது வீட்டில் வசித்து வந்ததாகவும், அப்போது அவர் தனக்கு சொந்தமான 100 பவுன் நகையை எடுத்து வந்ததாகவும் கூறினார்.

அவரது நகையை திரும்ப கொடுக்கும்படி பாஸ்கர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள் முழுமையான விசாரணைக்கு பின்பே நகையை திரும்ப கொடுப்பது பற்றி பரிசீலிக்க முடியும் என்றனர். இதனால், பாஸ்கர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய நகையை கேட்டு பெறுவதற்காக சித்ரா தனது சகோதரிகளுடன் விவேக் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டுக்கு வெளியே அவர்கள் தாங்கள் வந்த காரில் அமர்ந்திருந்தனர்.

அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து வெளியேறி காரில் சென்று வந்தனர். அவ்வாறு அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் சித்ரா தனது சகோதரிகளுடன் நகை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்று வந்தனர். இதனால் மாலையில் சித்ரா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்