இந்தியாவிலேயே முதல் முறையாக செல்போன் செயலி மூலம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல்
செல்போன் செயலி மூலம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 8–ந் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவிலேயே முதல் முறையாக செல்போன் செயலி மூலம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், 8–ந் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளதாகவும் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மாத்தர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மாத்தர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் செல்போன் செயலி மூலம் நடைபெற உள்ளது. செல்போன் செயலி மூலம் வாக்களிப்பது எப்படி என்பதை YCEA EVA Practice என்ற செயலியை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அன்று, தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்து அங்குள்ள செல்போன் மூலம் மட்டுமே வாக்கு அளிக்க முடியும்.
இளைஞர் காங்கிரசில் தீவிர உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்கவும், வாக்களிக்கவும் முடியும். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வருகிற 8–ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 9–ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 10–ந் தேதி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பார்கள். அதுவரை விஜய் இளஞ்செழியன் பொறுப்பை நிர்வகிப்பார்.
பேட்டியின்போது, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், துணைத் தலைவர் நாசே ராஜேஷ், தேர்தல் அதிகாரி கே.டி.பென்னி உள்பட பலர் உடன் இருந்தனர்.