எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு காட்ட வேண்டும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2017-10-10 21:45 GMT

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– முரசொலி காட்சி அரங்கம் நிரந்தரமாக அமைக்கப்படும் என சொல்லி இருக்கிறீர்கள், இதுவரை எத்தனை பேர் பார்வையிட்டு இருக்கிறார்கள்?.

பதில்:–  இன்றுடன் அதனை நாங்கள் முடித்து வைக்க இருக்கிறோம். நேற்று வரையில் ஏறக்குறைய 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்து இருக்கிறார்கள்.

கேள்வி:– பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அமித்ஷாவின் குடும்பத்தினர் அதிக பயனடைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?.

பதில்:– பா.ஜ.க. ஆட்சியைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு வந்தால், அது உண்மையோ அல்லது உண்மைக்கு புறம்பானதோ, உடனடியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதுபோல், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவின் மகன் மீது இந்த குற்றச்சாட்டு இப்பொழுது வந்திருக்கிற நேரத்தில், அதுபோன்ற சோதனைகள் நடைபெறுமா என்பதுதான் என் கேள்வி.

கேள்வி:– டெங்குவால் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கும் சூழலில், சுகாதாரத்தை கூட தமிழக அரசால் சரிவர செயல்படுத்த முடியவில்லையே?.

பதில்:– இதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு துளிகூட கவலையில்லை. அதனால் தான் நான் நேற்று கூட, ‘இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான்’, என்று குறிப்பிட்டு சொன்னேன்.

கேள்வி:– டெங்கு பிரச்சினையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?.

பதில்:– இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில் எல்லாம் அவர்கள் அக்கறை செலுத்துவது இல்லை. அவர்களுடைய அக்கறை எல்லாம் ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா விவகாரத்தில் வருமான வரித்துறையிடம் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது, குட்கா ஊழலில் புகாரில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது, என்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி மைனாரிட்டியாக இருக்கும் இந்த ஆட்சியை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது என்பதில் தான் அக்கறையுடன் உள்ளார்கள்.

கேள்வி:– எம்.ஜி.ஆர். சிலை உட்பட தியாகிகள் சிலைகள் மீது எல்லாம் காக்கை எச்சம்படும் நிலை இருக்கும்போது, சிவாஜி சிலை மீது மட்டும் காக்கை எச்சம் படக்கூடாது என்பதால் மணிமண்டபத்தில் வைத்திருக்கிறோம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?.

பதில்:– இந்த அபூர்வமான கருத்தை சொன்னவரிடம் தான் இந்த கேள்வியை கேட்டு, அதனை மக்களுக்கு வெளிபடுத்துங்கள்.

கேள்வி:– முதல்–அமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது என புகார்கள் வருகிறதே?. டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில் இந்த விழாக்கள் தேவையா?.

பதில்:– இந்த விழா தேவையில்லாதது என நான் சொன்னால் ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சொல்கிறேன் என்பார்கள். நான் எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கிறேன் எனச் சொல்வார்கள். அதற்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. இருந்தாலும், அதிலே காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காட்ட வேண்டும். கொசு மருந்து அடிப்பதில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள். இதற்கு தலைமை செயலாளரே பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டிருக்கிறேன்.

கவர்னரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். இன்றைக்கு, தலைமை செயலாளரே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி அடிக்கும் கொள்ளைக்கும், கூத்திற்கும், கும்மாளத்திற்கும் கைகோர்த்திருக்கும் சூழல் தான் தொடர்ந்து இருந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்