தேசத்துரோக வழக்கில் டி.டி.வி.தினகரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

Update: 2017-10-10 23:15 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்ததால் இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக கூறி டி.டி.வி.தினகரன், அவரது ஆதரவாளரான கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வம் உள்பட 17 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிடிவி.தினகரன் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக பதில் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், இந்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்