ஒருதலைக்காதல் விவகாரத்தில் பயங்கரம் சாப்ட்வேர் என்ஜினீயர் ஹெல்மெட்டால் அடித்துக்கொலை

ஒருதலைக்காதல் விவகாரத்தில் பயங்கரம் சாப்ட்வேர் என்ஜினீயர் ஹெல்மெட்டால் அடித்துக்கொலை

Update: 2017-10-05 22:00 GMT
பூந்தமல்லி,

ஒருதலைக்காதல் விவகாரத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஹெல்மெட்டால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கம், வேதா நகர் அருகே உள்ள சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28), திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ராஜ்குமாரை வழிமறித்த வாலிபர்கள் சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்த நபர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் ராஜ்குமார் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதனைக்கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மயங்கி கிடந்த ராஜ்குமாரை மீட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் துரைராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது ராஜ்குமார், தான் பணிசெய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரியவந்தது. இதை பிடிக்காமல் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது கல்லூரி நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து திருவான்மியூரை சேர்ந்த அவரது நண்பர்களான ஜெயசீலன் (26), பிரவீன்குமார் (28), கிங்ஸ்டன் (27), அபிஷேக் (26) ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜ்குமாரிடம் இது குறித்து பேச வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஹெல்மெட்டால் தாக்கி விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயசீலன், பிரவீன்குமார், கிங்ஸ்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தலைமறைவாக உள்ள அபிஷேக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்