காங்கிரசில் இருந்து விலக முடிவா? நடிகை குஷ்பு பேட்டி

காங்கிரசில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.

Update: 2017-10-01 23:00 GMT
சென்னை,

காங்கிரசில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார். காங்கிரசில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று அவர் கூறினார்.

நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 2010-ல் தி.மு.க.வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். பின்னர் தி.மு.க. தலைவர் பதவி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதால் அவரது வீட்டில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 2014-ல் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்தபோது சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி வந்து கட்சி பணிகளில் ஈடுபட்டார். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.

ஆனால் இளங்கோவன் மாற்றப்பட்டு திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவரான பிறகு, குஷ்புவை சத்தியமூர்த்தி பவன் பக்கம் பார்க்க முடியவில்லை என்று கூறுகின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்படுவது இல்லை என்றும், திருநாவுக்கரசர் கோஷ்டியினர் குஷ்புவை ஓரம் கட்டுவதாகவும் தகவல் வெளியானது.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் நடிகை நக்மாவை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாகவும் கூறப்பட்டது. காங்கிரசில் தீவிர உறுப்பினராக இருந்தால்தான் பொது தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது.

ஆனால் அந்த தகுதியும், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பதவியும் குஷ்புவுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குஷ்பு, காங்கிரசில் நீடிப்பதா? வேண்டாமா? என்ற அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரத்தில் தகவல்கள் பரவி உள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்குவதற்கு ஆதரவான கருத்தை குஷ்பு தெரிவித்து இருந்தார். எனவே அவர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவருடைய கட்சியில் சேருவார் என்றும் வதந்தி பரவி உள்ளது.

இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் காங்கிரசை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். காங்கிரசில் இருந்து விலகப்போவதாக வந்துள்ள தகவல்கள் பொய்யானது. முற்றிலும் உண்மைக்கு மாறானது. வேலை வெட்டி இல்லாதவர்கள் எனக்கு எதிராக இந்த வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

காங்கிரசுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களின் பொய் பிரசாரமே இது. காங்கிரசில் இருந்து நான் விலகுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேவை இல்லாமல் இப்படி ஒரு வதந்தியை பரப்பி உள்ளனர்.”

இவ்வாறு குஷ்பு கூறினார்.

மேலும் செய்திகள்