கமல்ஹாசன் சினிமாவில் முதல்–அமைச்சராக நடிக்கலாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் முதல்–அமைச்சராக நடிக்கலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Update: 2017-09-22 18:45 GMT
செங்குன்றம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை மாதவரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடிகர் கமல்ஹாசன், கோடிக்கணக்காக பணம் போட்டு சினிமா படம் எடுத்து அதில் வேண்டுமானால் முதல்–அமைச்சராக நடிக்கலாம். அவரை ஒரு கவுன்சிலராக முதலில் வர சொல்லுங்கள் பார்ப்போம்.

பொதுமக்களுக்கு சாலை வசதி இல்லை. தண்ணீர் வசதி இல்லை என பிரச்சினைகளை சந்தித்து கவுன்சிலராக நின்று, நகராட்சி பின்னர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று அப்படி படிப்படியாக வளர்ந்து இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்து தேர்தலில் போட்டியிட்டு அதன்பிறகுதான் முதல்–அமைச்சராக முடியும்.

கிளை கழகம், ஒன்றிய கழகம், மாவட்ட கழகம் ஆகிய அமைப்புகளை அமைத்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியும். சினிமாவில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் கமல்ஹாசனின் பேச்சு திருப்திகரமாக இல்லை.

பாட்டு எழுதி புகழ் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர் வங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் கமல்ஹாசன், குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குபவர். அடுத்தவரிடம் குறை இருக்கிறதா, தப்பு இருக்கிறதா என கண்டுபிடித்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். அவர் எந்த நல்ல வேலையையும் செய்யமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்