நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2017-09-11 06:24 GMT


செந்துறை, 


அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று காலை அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்றார். அங்கு அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீட்டில் தரையில் அமர்ந்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நடிகர் விஜய் அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூற வருவதற்கான எந்த தகவலும் ரசிகர்களுக்கோ, ஊடகங்களுக்கோ, போலீசாருக்கோ தெரிவிக்கவில்லை. 

ஏராளமான ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்பதாலும், அதனால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படாதவாறு இருக்கவும் அவர் ரகசியமாக வந்து சென்றதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்