போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இந்த மாத இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2017-09-06 21:45 GMT
ஈரோடு,

போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த இந்த மாத இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சந்திக்கும் அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுத்தேர்வை சந்திக்கும் அளவுக்கு பாடங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.

நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் கொள்கையாகும். அதற்காக சட்டம் இயற்றி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். குஜராத், மராட்டியம் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நீட் மட்டுமின்றி மத்திய அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்த தமிழகம் முழுவதும் 412 இடங்களில் பயிற்சி மையங்கள் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்பட உள்ளது.

இதில் ராஜஸ்தான், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த கல்வியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். இணையதளம் மூலமாகவும், ஸ்மார்ட் செல்போன் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் நீட் தேர்வை முறியடிக்கும் வகையில் மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள். தமிழக மாணவர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்வார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

மேலும் செய்திகள்