சிறார் நீலத் திமிங்கலம் விளையாடுவது தெரியவந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க டிஜிபி அறிவுறுத்தல்

சிறார் நீலத் திமிங்கலம் விளையாடுவது தெரியவந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2017-09-05 13:31 GMT
சென்னை,

இந்தியாவில் நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 50 நாட்களை இலக்காக கொண்டே அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அந்த உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், இரவு நேரத்தில் திகில் படங்களை பார்ப்பது, கையை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடியில் இருந்து குதிப்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விபரீதமான விளையாட்டுக்கு ஏராளமான மாணவ–மாணவிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த விளையாட்டு மட்டும் ஒழிந்தபாடில்லை.

இந்தநிலையில் நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நீலத் திமிங்கல விளையாட்டு மூலமாக பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம்.   நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை. 

சிறார் எவராவது நீலத் திமிங்கலம் விளையாடுவது தெரியவந்தால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.  நீலத் திமிங்கல விளையாட்டு விளையாடும் மாணவர்களின் மனநிலையில் ஏதாவது வித்தியாசமான மாற்றம் தெரிகிறதா என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

மேலும் செய்திகள்