தமிழகம்-புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.;

Update:2017-09-01 03:15 IST
சென்னை,

ஈரப்பதமிக்க காற்று காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

ஈரப்பதமிக்க காற்று

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

வங்கக்கடலில் இருந்து ஈரப்பதமிக்க கிழக்கு திசை காற்று தமிழகத்தின் வளி மண்டலத்தின் மீது வீசத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அதிக பட்சமாக செஞ்சியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமயபுரத்திலும், கலவையிலும் தலா 8 செ.மீ. மழை பெய்து உள்ளது.

தமிழகம்-புதுச்சேரியில் மழை

1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை அதிக ஈரப்பதகாற்று வீச உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் 5 நாட்கள் வரை அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் , வட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் நாளை(சனிக்கிழமை) மிக கனத்த மழை பெய்யும்.

சென்னையில் இடியுடன் மழை

சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மழை அளவு

செஞ்சி 9 செ.மீ., சமயபுரம், கலவை தலா 8 செ.மீ., செங்கம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம், மயிலம் தலா 7 செ.மீ., காவேரிப்பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, திருவள்ளூர் தலா 6 செ.மீ., ஆம்பூர், தேவலா, லால்குடி, போளூர் தலா 5 செ.மீ., விரிஞ்சிபுரம், பூண்டி, திண்டிவனம், பொன்னேரி, வானூர், பூந்தமல்லி தலா 4 செ.மீ., கோவிலங்குளம், கேளம்பாக்கம், மதுரை தெற்கு, செம்பரம்பாக்கம், கிராண்ட் அணைக்கட்டு, திருமானூர்,வாழப்பாடி, தாமரைப்பாக்கம், ஆர்.கே.பேட்டை தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 60 இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்