சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் குறித்து டெல்லி அதிகாரிகள் ஆய்வு

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகளை டெல்லியில் இருந்து வருகை தந்த மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2017-08-21 22:45 GMT

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரம் முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன.

முதல் கட்டமாக பணிகள் நிறைவடைந்த கோயம்பேடு – ஆலந்தூர், ஆலந்தூர் – பரங்கிமலை, விமானநிலையம் – சின்னமலை மற்றும் நேரு பூங்கா – விமானநிலையம் இடையே மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

இதில் சுரங்கப்பாதை பணியை பொறுத்தவரையில் மே தின பூங்கா – தேனாம்பேட்டை இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் கொண்ட 2 சுரங்கப்பாதைகளில் முதல் பாதை 80 சதவீதமும், 2–வது பாதை 72.5 சதவீதமும் நிறைவடைந்து உள்ளது.

அதேபோல் வண்ணாரப்பேட்டை – கொருக்குப்பேட்டை வரை உள்ள 2 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட 2 சுரங்கப்பாதையில் முதல் பாதை 33.35 சதவீதமும், 2–வது பாதை 43 சதவீதமும் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளரும், மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் புதிய தலைவருமான துர்கா சங்கர் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்தனர்.

அவர்கள் சென்னை சென்டிரலில் உள்ள மெட்ரோ ரெயில் சுரங்கத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் முதல் ஈக்காட்டுதாங்கல் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஆய்வு பணியின்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்