சிவாஜி கணேசன் சிலை இரவோடு இரவாக அகற்றம் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது

சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டு மணி மண்டபத்தில் நிறுவப்பட்டது.

Update: 2017-08-03 06:36 GMT
சென்னை,

மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும்
சந்திக்கும் பகுதியில்  சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர சிலைலையை  அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார்.

சென்னையைச் சேர்ந்த காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜிசிலை நிறுவப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  சென்னை ஐகோர்ட்டில் பல மாதங்களாக நடந்து வந்த அந்த வழக்கில் 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவை அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது.

என்றாலும் சிவாஜி சிலையை அகற்ற கால அவகாசம் தர வேண்டும் என்று தமிழக அரசு கூறியது. இது தொடர்பாக சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, “அடையாரில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு சிவாஜி சிலையை அகற்றும் நடவடிக்கை நடைபெறும்” என்றார்.

இந்த நிலையில் சென்னை அடையாரில் சத்யா ஸ்டுடியோ எதிரில் கட்டப்பட்டு வந்த சிவாஜி மணிமண்டபம் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன. எனவே சிவாஜி சிலை எந்த நேரத்திலும் அகற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்றிரவு சிவாஜி சிலையை அகற்றும் அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. நள்ளிரவு 1 மணிக்கு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை அகற்றத் தொடங்கினார்கள்.

4.30 மணிக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, சிவாஜி சிலையை லாரியில் ஏற்றினார்கள். மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுவப்பட்டது.

சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்ட தகவல் இன்று காலைதான் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. அதுவும் மெரீனா கடற்கரை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதி வந்ததும் சிவாஜி சிலை இல்லாமல் வெறும் பீடம் மட்டும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்