சிவாஜி மணிமண்டபத்தில் புதிய சிலையை அமைக்க வேண்டும் முதல்–அமைச்சருக்கு, சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சிவாஜி மணிமண்டபத்தில் புதிய சிலையை அமைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு, சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-08-02 21:30 GMT
சென்னை,

மெரினாவில் அகற்றப்பட உள்ள சிவாஜி சிலையை அப்பகுதியிலேயே நிறுவ வேண்டும். சிவாஜி மணிமண்டபத்தில் புதிய சிலையை அமைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு, சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை, அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்கவேண்டும் என்று சிவாஜி சமூகநலப்பேரவை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 19–ந் தேதி அன்று 4 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிலையை தற்போதுள்ள சாலை நடுவிலிருந்து அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், சிலையை காமராஜர் சாலையில் உள்ள சிலைகள் வரிசையில் நிறுவ எந்தத் தடையும் விதிக்கவில்லை. கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது,

பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் உள்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது. அதுபோல சிவாஜ கணேசனுக்கு மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிவாஜியின் சிலையை தற்போது இருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்க வேண்டும். மணிமண்டபத்தில் அவருடைய வேறு சிலையை அமைக்கவேண்டும் என்று முதல்–அமைச்சரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும் செய்திகள்