அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர கூட்டம் இரு அணிகள் இணைப்பு, டி.டி.வி.தினகரன் வருகை குறித்து ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2017-07-31 23:45 GMT
சென்னை,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்தும், டி.டி.வி.தினகரன் வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. அணிகளின் இணைப்புக்காக ஆகஸ்டு 4–ந் தேதி வரை காத்திருப்பேன் என்று 60 நாள் காலக்கெடுவை டி.டி.வி.தினகரன் விதித்திருந்தார். அவர் விதித்த காலக்கெடு இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது. ஆனால் அ.தி.மு.க. இணைப்பு முயற்சி இதுவரையில் நடக்கவில்லை.

இதையடுத்து 5–ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்து கட்சி பணிகளில் டி.டி.வி.தினகரன் ஈடுபட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் வருகை செய்தி, பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு அவசர அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் கட்சியும், ஆட்சியும் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கருதுகின்றனர்.

எனவே டி.டி.வி.தினகரன் வருகை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். தற்போது போன்றே கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பை சாத்தியமாக்குவதற்கு, அதில் உள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்