கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலையை வித்யாசாகர்ராவ் திறந்துவைத்தார்

கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலையை வித்யாசாகர்ராவ் திறந்துவைத்தார்.

Update: 2017-07-14 23:45 GMT
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் 2-வது நுழைவாயில் அருகே 6 அடி உயரத்தில் வெண்கலத்தில் செய்யப்பட்ட அவ்வையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சிலையை கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வையார் சிலையின் கீழ் ஆத்திச்சூடி பலகையை திறந்து வைத்தார். விழாவுக்கு முன்னிலை வகித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆத்திச்சூடி பலகையில் இடம் பெற்றிருந்த பாடலை ‘அ’என்று எழுதி தொடங்கிவைத்தார் அப்போது அதில் ‘அறம் செய விரும்பு’ என்ற ஆத்திச்சூடி வாசகம் ஒலித்தது.

விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசுகையில் கூறியதாவது:-

தமிழ் மொழி உலகில் பழமையான மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மொழியில் இலக்கிய செறிவு உள்ளிட்ட பல வளங்கள் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள நாடகங்கள், பாடல்கள் ஆகியவை உலக அரங்கில் இடம் பெற்றுள்ளன. அவ்வையார் பாடிய பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாதது. அவ்வையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியவற்றிற்கு ஈடு இணை இல்லை. தமிழ் மொழிக்கு திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவை பெருமை சேர்க்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்த பெரும்புலவர் அவ்வையார். அவருடைய சிலை திறப்புவிழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகின்றேன். மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் வாரி வழங்கிய அவ்வையாரை தமிழ் மக்கள் இன்றளவும் அறிவுக்கடவுளாக வணங்குவதை நாம் பார்க்கின்றோம். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை தமிழுக்கு வழங்கியவர் அவ்வையார் என்று கூறினார்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசுகையில், 4 வயதிலேயே பாடல் பாடியவர் அவ்வையார். அவர் அரசன் அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தார். தனது 19 வயதில் ஆத்திச்சூடி எழுதினார். ஆத்திச்சூடி பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் பிரபலமாகி உள்ளது என்றார்.

விழாவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கணேசனுக்கு விருது

விழாவில் அவ்வையார் சிலைக்கு தொழில்நுட்பம் வழங்கிய அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், நிர்மல் குமார், ராமதாஸ், சுதர்சன், அவ்வையார் சிலை செய்த சிற்பி கிஷோர் நாகப்பன் ஆகியோரை கவர்னர் வித்யாசாகர் ராவ் கவுரவித்தார்.

விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், எம்.பி.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்