உணவு பொட்டலங்கள் மீது திருத்தப்பட்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டலாம்

உணவு பொட்டலங்கள் மீது திருத்தப்பட்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2017-07-06 22:45 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. வரியினால் பொட்டலப் பொருட்களின் சில்லரை விற்பனை விலை (எம்.ஆர்.பி.) திருத்தப்படலாம். இந்தநிலையில் 2011–ம் ஆண்டு சட்டமுறை எடையளவு விதிகளின் படி கடந்த 1–ந்தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாமல் இருப்பில் உள்ள பொட்டலப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி காரணமாக திருத்தப்படும் விலையை, நடைமுறையில் உள்ள சில்லரை விற்பனை விலையுடன் செப்டம்பர் 30–ந்தேதி வரை மாற்றியமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்படும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை தனியாக ‘ஸ்டிக்கர்’ ஒட்டியோ, முத்திரையிட்டோ, அச்சிடப்பட்டோ இருக்கலாம். அந்த ‘ஸ்டிக்கர்’ ஏற்கனவே அச்சிடப்பட்ட விலையை மறைத்து ஒட்டக்கூடாது. இதன்மூலம் கடந்த 1–ந்தேதிக்கு முன்பு அச்சிடப்பட்டு இருப்பில் உள்ள பொருட்களின் மீதுள்ள விலையில் உரிய திருத்தம் மேற்கொண்டு செப்டம்பர் 30–ந்தேதி வரை பயன்படுத்தலாம்.

பொட்டலப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கும், ஜி.எஸ்.டி.யினால் மாற்றியமைக்கப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசம், அப்பொருளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யின் வரி விகிதத்தை விட அதிகப்படியாக இருக்கக்கூடாது.

எடையளவு மற்றும் பொட்டலப் பொருட்களின் விதிமீறல்கள் மற்றும் எம்.ஆர்.பி. விலை மீதான புகார்கள் குறித்து TNLMCTS எனும் செல்போன் ஆப் மூலம் பயனாளிகள் புகார் தெரிவித்து உரிய நிவாரணம் காணலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்