‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவினர் சென்னையில் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பாராட்டினார்.

Update: 2017-07-02 22:15 GMT
சென்னை,

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையில் மாணவர்கள் யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோர் கொண்ட குழுவினர் தயாரித்த ‘கலாம் சாட்’ என்ற 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைகோள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’வில் இருந்து கடந்த ஜூன் 22-ந் தேதி விண்வெளியில் ஏவப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த மாணவர்கள் குழுவினர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று(நேற்று) காலை என்னை நேரில் சந்தித்தனர். 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.

சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கைகோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் ‘கலாம் சாட்’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைகோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டேன். தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்