ராகுல்காந்தி விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; திருநாவுக்கரசர் தகவல்
ராகுல்காந்தி விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசை வலுப்படுத்த உள்ளதாக திருநாவுக்கரசர் கூறினார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி பாபிராஜூ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாவட்டத்தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் தமிழ்செல்வன், எம்.எஸ்.திரவியம், ஜி.தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருநாவுக்கரசர் கூறியதாவது:–
தமிழக காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி இருக்கிறோம். இந்த பணி ஒரு மாத காலம் நடைபெறும். உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத் தலைவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்டு 7–ந்தேதி தொடங்க இருக்கிறது.
எம்.எல்.ஏ.க்கள் கையில்...காங்கிரஸ் துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ராகுல்காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். உறுப்பினர்களுடன் உரையாடினார். நிறைய பேருக்கு உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை கருத்தில்கொண்டு விரைவில் ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர் நிர்வாகிகளை சந்திக்கிறார். காங்கிரசை வலுப்படுத்த உள்ளார். ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.
தமிழகத்தில் இப்போது செயல்படாத, மக்கள் விரோத அரசு நடக்கிறது. 3 பிரிவுகளாக ஆளுங்கட்சி இருக்கிறது. தினமும் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது போல், அங்கே எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சென்றார்கள்? இங்கே எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று கேட்கும் நிலை இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வது அவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் கையில் தான் இருக்கிறது. வேறு யாரும் ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள்.
தேர்தலை சந்திக்க தயார்சட்டசபையில் ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். எங்கள் ஆதரவை அ.தி.மு.க. கோரினால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். எங்களை பொறுத்தவரையில் இந்த மக்கள் விரோத, செயல்பாடற்ற அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால், எங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்.
தமிழகத்தில் இதுவரையில் நிலையான கவர்னர் நியமிக்கப்படவில்லை. ஏன் அவர்களிடம் சரியான ஆட்கள் இல்லையா? வேண்டுமானால் நாங்கள் தருகிறோம். விரைவில் தமிழகத்திற்கு நிரந்தர கவர்னரை மத்திய அரசு நியமிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிராமங்களுக்கு சென்று மக்களுடன், மக்களாக பழக வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உங்களுடன் நானும் பணியாற்ற வருவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அந்த அடிப்படையில் ராகுல்காந்தி விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.