கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு; விலை இல்லா புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன.;
சென்னை,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இன்றையதினமே விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறைதமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 12–ந்தேதியும், அதைதொடர்ந்து 19–ந்தேதியன்று 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகின. கோடை விடுமுறை முடிந்து கடந்த 1–ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் பள்ளி கல்வித்துறை, பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளிவைத்தது. அதன்படி 7–ந்தேதி (இன்று) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கூடங்கள் திறப்புஅதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையே மாணவ–மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு, மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
இதில், 1 முதல் 9–ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் ஆகும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பருவம் அல்லாத வகையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
விலை இல்லா பாடப்புத்தகங்கள்அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்பட உள்ளன. பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மூலம் குடோன்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்லும் நடைமுறை இருந்து வந்தது.
ஆனால் பள்ளிக்கூடம் திறக்கும் அன்றே புத்தகங்கள் வழங்கும் வகையில், இந்த ஆண்டு முதல் பள்ளிக்கூடங்களுக்கே நேரடியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல சீருடைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் இன்று வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
தீவிர பிரசாரம்37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகள், 8 ஆயிரத்து 403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்து 33 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. பள்ளிகள் திறக்கும் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகள் சேர்க்கை குறித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லேப்–டாப், புத்தகப்பை மற்றும் இதர கல்வி உபகரணங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் செயல்பாடுகள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும்.
சமூக நலத்துறை சார்பில் மாணவ–மாணவிகளுக்கு 3 அளவுகளில் சீருடைகள் தைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுகளில் பொருத்தமாக உள்ள சீருடைகள் வழங்கப்படும். இனி வரும் காலங்களில் மாணவ–மாணவிகளுக்கு அளவு எடுத்து சீருடை தைப்பது பற்றியும், பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அலைமோதிய கூட்டம்பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த கோடை விடுமுறை முடிந்துள்ளதால் வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் நேற்று காலை முதலே சென்னைக்கு திரும்பியவண்ணம் இருந்தனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சில ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் அதிகம் வசூலித்ததாக பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.