‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கு

திருச்சி, துறையூரை சேர்ந்தவர் குழந்தைராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.

Update: 2017-06-06 19:41 GMT

சென்னை,

புத்தகத்தை ஆதிதமிழர் பேரவை சார்பில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம், மதுரை வீரன் குறித்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, அவரது வீரதீர செயல்கள் குறித்து எழுதப்பட்டது ஆகும். பிற சமுதாயத்தினரை எந்த விதத்திலும் அவதூறாக எழுதவில்லை. சுமார் 2 ஆயிரம் புத்தகம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இந்த புத்தகம் பிற சமுதாயத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 19–ந் தேதி, புத்தகத்துக்கு தடைவிதித்தும், அதை பறிமுதல் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 6 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்