சென்னை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், தினமும் பொதுமக்களை சந்திக்க ஏற்பாடு
சென்னை நகர போலீஸ் நிலையங்களில் தினமும் 2 முறை இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெறுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.;
சென்னை,
நேற்று அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பொதுமக்களை சந்திக்க நேரம்பொதுமக்களுக்கு போலீஸ் நிலையங்களில் உரிய மரியாதை கிடைக்க வேண்டும், போலீஸ்–பொதுமக்கள் இடையே நட்பு நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதன்படி, அதிகாரிகளுடன் கலந்து பேசி, பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க உரிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமும் (ஞாயிறு நீங்கலாக) பகல் 11 மணி முதல் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் போலீஸ் நிலையங்களில் சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பார்கள்.
தீர்த்துவைப்பார்கள்மனுக்களை பெற்று அவர்களால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை உடனே தீர்த்து வைப்பார்கள். இன்ஸ்பெக்டர்களைத்தான் சந்திக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இந்த குறிப்பிட்ட நேரத்தில் இன்ஸ்பெக்டர்களை சந்திக்கலாம்.
மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருந்தால், இன்ஸ்பெக்டர்களை சந்திக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்திலும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று பணியில் இருக்கும் சப்–இன்ஸ்பெக்டர்களை சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.
இதன் மூலம் போலீசாரின் பொதுமக்கள் சேவை எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நானே தினமும் கண்காணிப்பேன்.
போக்குவரத்துசென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சில புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். பழுதடைந்து காணப்படும் சிக்னல்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சிக்னல்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்பணியும் முடிக்கப்படும். இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்தும்பணியும் நிறைவேற்றப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை உள்ளது. பெற்றோர் இதை கண்காணிக்க வேண்டும். வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், பந்தயம் கட்டி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தீ விபத்துசென்னை தியாகராயநகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நடந்த தீ விபத்து தொடர்பாக தற்போது விபத்து சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கை கிடைத்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபத்து இல்லை என்ற நிலை உருவானவுடன், தீ விபத்து நடந்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் குடியேறவும் ஒப்புதல் கொடுக்கப்படும்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது தேவைப்பட்டால் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு போடப்பட்ட எப்.ஐ.ஆர். நகலும் கொடுக்கப்படும். ஆன்லைனில் புகார் கொடுத்தால், அதற்கான ரசீது உடனே கிடைக்கும்.
குற்றங்கள் அதிகரிப்பா?சென்னையில் செல்போன் பறிப்பு குற்றங்கள் அதிகப்படியாக நடக்கிறது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். மற்ற குற்றங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை. கொலை சம்பவங்களில் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.