சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி வறண்டது; புழல் ஏரியில் நீர்இருப்பு வெகுவாக குறைந்தது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான சோழவரம் ஏரி வறண்டு விட்டது. இதேபோல் புழல் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.

Update: 2017-06-05 21:53 GMT

செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது இந்த ஏரியில் நீர்மட்டம் 138 மில்லியன் கன அடி என வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியும் வறண்டு வருகிறது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரி வறண்டு விட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் ஷட்டர் மூடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியும் வறண்டு விட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

பருவமழை எதிர்பார்த்தபடி சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்யவில்லை. கோடை வெயிலின் தாக்கத்தால் புழல் ஏரியில் உள்ள 138 மில்லியன் கன அடி தண்ணீரும் காய்ந்து புழல் ஏரியும் விரைவில் வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வீணான தண்ணீர்

புழல் ஏரியில் உள்ள குறைந்தபட்ச நீரை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும்நிலையில் வரும் காலத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது குறித்து சென்னைவாசிகள் தமிழக அரசை எதிர்பார்த்து வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையில் புழல் ஏரி நிரம்பியதால் 2 ஷட்டர்கள் மூலம் திறந்து விடப்பட்ட பல மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இந்த புழல் ஏரியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால், வீணான நீரை சேமித்து வைத்து இருக்கலாம். எனவே தண்ணீர் வீணாவதை தடுக்க புழல் ஏரியை ஆழப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏரியின் ஒரு புறத்தில் செங்குன்றம் பேரூராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி எரித்து வருவதால் தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்