மக்களை கருணாநிதி நேசிப்பதும், கருணாநிதியை மக்கள் நேசிப்பதும் அவரது வெற்றிக்கு காரணம்: ராகுல் காந்தி பேச்சு

கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பதில் பெருமையாக நினைக்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Update: 2017-06-03 15:04 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.

அதன்பின் கூட்டத்தின் முன் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையாக நினைக்கிறேன் என கூறினார்.  வலிமையும், துணிவுமே கருணாநிதியின் ஆற்றல்.  அவர் கோடான கோடி மக்களால் நேசிக்கப்படுகிறார்.  மக்களை நேசிப்பதாலேயே அவர் தொடர் வெற்றி பெற்று வருகிறார்.

அவர் 60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை பணியாற்ற காரணம் மக்களை ஆழமாக நேசித்ததனாலேயேதான்.  அவரது பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.  தினமும் மக்கள் பிரச்னைகளை பற்றியே எழுதுகிறார்.

தமிழின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர்.  மக்களை கருணாநிதி நேசிப்பதும், கருணாநிதியை மக்கள் நேசிப்பதும் கருணாநிதியின் தொடர் வெற்றிக்கு காரணம் என கூறினார்.

மத்திய அரசு யாரையும் கேட்காமல் பணத்தை செல்லாது என அறிவித்தது.  எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  முக்கிய பிரச்சினைகளில் யாரையும் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி முடிவு எடுக்கிறார்.

நாடு முழுவதும் ஒரே கலாசாரத்தை திணிக்க முயற்சிக்கும் மத்திய பாரதீய ஜனதாவின் முயற்சியை ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

மு.க. ஸ்டாலின் சரியான திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.  இன்று கருணாநிதி பற்றி பேசுவதுபோல் ஒரு நாள் ஸ்டாலின் பற்றியும் பேசுவோம்.  ஸ்டாலினும் தமிழக மக்களுக்காக பேசி வருகிறார் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்