ரஜினிகாந்த் ஆலோசனை அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கேட்கிறார்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும், நடிகர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு அனைவரும் தயாராக இருங்கள்” என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. ரஜினிகாந்தை சந்தித்து பேசிய அவரது நண்பர் ராஜ்பகதூர், தமிழருவி மணியன் ஆகியோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.
அரசியலுக்கு முன்னோட்டமாக ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ரஜினிகாந்த் ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.
கருத்து கேட்பு
காலா படப்பிடிப்பு மூன்று, நான்கு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும், அதன்பிறகு அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தனது நலம் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள், மூத்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் நேரிலும், போனிலும் ரஜினிகாந்த் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
காலா படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன் தனது வீட்டில் பலரை இது தொடர்பாக அவர் சந்தித்து கருத்து கேட்டார். அப்போது சிலர் நீங்கள் கட்சி தொடங்கினால் அதில் சேர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தனி கட்சி தொடங்கி அனுபவப்பட்ட தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரிடமும் போனில் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிரஞ்சீவி-அமிதாப்பச்சன்
சிரஞ்சீவி அரசியல் ஆசையில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் தோல்வி அடைந்ததும் காங்கிரசில் கட்சியை இணைத்து மத்திய மந்திரி பதவியை பெற்றார். தனி கட்சி தொடங்குவதால் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவரிடம் ரஜினிகாந்த் விவாதித்ததாக தெரிகிறது.
நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரிடம் தனி கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தற்போது காலா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருப்பதால், அமிதாப்பச்சன் மற்றும் அங்குள்ள அரசியல் பிரமுகர்களிடமும் கட்சி ஆரம்பிப்பது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவரை வளைத்து போட்டு கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி உள்ளன. பா.ஜ.க, ரஜினி கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று உள்ளன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.