அதிகம் பேர் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில் தகவல்

இந்தியாவிலேயே அதிகம் பேர் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.;

Update:2017-05-20 03:45 IST
சென்னை, 

தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு அறிக்கையில், 2011-ம் ஆண்டு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை, குடிசை பகுதியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. 1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டில் இருந்த மக்கள் தொகையைவிட 2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டில் தமிழகத்தில் மக்கள் தொகை 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே 10 ஆண்டில் இந்திய அளவில் மக்கள் தொகையை ஒப்பிடும்போது தமிழகத்தின் மக்கள் தொகை 17.64 சதவீதம் குறைந்துள்ளது.

மக்கள் நெருக்கடி

தமிழகத்தில் 1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டில் 6.49 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டில் 27.16 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரிகிறது.

மக்கள் நெருக்கடி தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்ந்துகொண்டே வருகிறது. 2011-ம் ஆண்டு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 555 பேர் வசித்துவந்தனர். இது, இந்திய அளவில் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்திய அளவில் 2011-ம் ஆண்டு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 385 பேர் தான் வசித்துவந்தனர். நெருக்கடி அதிகரித்து வருவதால் கழிவுநீர் மாசு, திடக்கழிவு மாசு போன்றவற்றால் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுகிறது.

மோசமான குடிசை பகுதி

இந்தியாவிலேயே நகர்ப்பகுதிகளில் அதிகம் பேர் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்பகுதிகளில் வசிக்கின்றனர். பாலின விகிதாச்சாரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இந்த விகிதாச்சாரம் சீராக உள்ளது. தமிழகத்தில் குடிசை பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு 28 லட்சமாக இருந்தது. இது, இந்திய அளவில் குடிசை பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் 8 சதவீதம் ஆகும்.

சென்னையில் வசிப்பவர்களில் 18.88 சதவீதத்தினர் குடிசை பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதில் 50 சதவீதம் பேர் மிகமோசமான குடிசை பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

ரூ.1,500 கோடி மதிப்பில் வீடு

1971-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குடிசை பகுதியில் வசித்துவந்த 81,038 பேருக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 2010-2011-ம் ஆண்டில் இது 1 லட்சத்து 5 ஆயிரம் ஆக உயர்ந்தது.

ஜவகர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகர்ப்பகுதிகளில் குடிசையில் வசித்துவந்த 35,270 பேருக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்