இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 25-ந்தேதி டெல்லி வருகிறார்
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 25-ந்தேதி டெல்லி வருகிறார்.;
கொழும்பு,
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 25-ந்தேதி டெல்லி வருகிறார். இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டெல்லி வருகிறார் ரனில்
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே, அங்குள்ள கண்டி நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 நாள் பயணமாக டெல்லிக்கு 25-ந்தேதி செல்கிறேன். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளேன்.
எனது இந்திய பயணத்தின்போது, கிழக்கு துறைமுக நகரான திரிகோணமலை மாவட்ட வளர்ச்சி பற்றி விவாதிப்பேன். திரிகோண மலையில் இந்தியாவின் இயற்கை எரிவாயு ஆலையை நிறுவ திட்டம் வைத்திருக்கிறோம். இது ஜப்பான் நாட்டுடனான கூட்டு திட்டமாக அமையக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணெய் சேமிப்பு வசதி
திரிகோணமலையில் இந்தியாவும், இலங்கையும் கூட்டாக எண்ணெய் சேமிப்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்திருப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
திரிகோணமலையில் உள்ள 99 எண்ணெய் கிடங்குகளில் 73 கிடங்குகளை இந்திய-இலங்கை இடையேயான புதிய பங்கு ஏற்பாட்டின் அடிப்படையில் நிர்வகிக்க உள்ளதாக இலங்கை பெட்ரோலிய மந்திரி சந்திமா வீரக்கொடி ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.
ரனில் விக்ரம சிங்கேயின் இந்திய வருகையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அங்கு அவர் ‘ஐ.நா. வெசாக் நாள்’ (புத்த பூர்ணிமா) கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பு
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே டெல்லிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வருகிறபோது, கடலுக்கு மீன்பிடிக்க செல்கிற நமது மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்வது, தாக்குவது, படகுகளை கைப்பற்றுவது போன்று நடைபெறுகிற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
அதேபோன்று ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயிடம் இந்தியா பிரச்சினை எழுப்ப வேண்டும் என்பதும் தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.