விபத்தில் காயம் அடைந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்

விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர் ஸ்டிரெச்சரில் வந்து பிளஸ்-2 தேர்வை ஆசிரியை உதவியுடன் எழுதினார்.

Update: 2017-03-03 21:00 GMT
சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று தமிழ் 2-வது தாள் தேர்வு நடைபெற்றது. சென்னை பிராட்வே செயிண்ட் கேபிரியேல் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி கால் மற்றும் கை எலும்புகள் முறிந்த நிலையில் ‘ஸ்கிரைபர்’ வைத்து தேர்வு எழுதினார். அதாவது அவர் சொல்ல, சொல்ல ஆசிரியை ஒருவர் தேர்வு எழுதினார்.

அந்த மாணவரின் பெயர் அஸ்மத்துல்லா (வயது 18), ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

நான் சென்னை பிராட்வே பிஷப் கோரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது நாய் ஒன்று குறுக்கே ஓடியதால் திடீரென்று பிரேக் போட்டேன். அதன் காரணமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தேன்.

பெற்றோர் உறுதுணை

எனது வலது கால் எலும்பும், இடது கை எலும்பும் முறிந்துவிட்டது. அருகில் இருந்தவர்கள் உடனே என்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினேன். எப்படி தேர்வு எழுதப்போகிறோம் என்று முதலில் தயங்கினேன்.

ஆனால் எனது தந்தை அனிபா, தாய் அயிசா ஆகியோர் எப்படியும் நான் தேர்வு எழுத வேண்டும் என்று உறுதுணையாக இருந்தனர். எனது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். எனவே நான் தேர்வு எழுத விண்ணப்பித்தேன். தேர்வில் நான் சொல்ல, சொல்ல அதை ஆசிரியர் ஒருவர் எழுத வேண்டும் என்று விண்ணப்பித்தேன்.

செயிண்ட் கேபிரியேல் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நான் தேர்வு எழுதி வருகிறேன். எப்படியும் தேர்வு எழுத வேண்டும் என்று எனக்குள் இருந்த ஆசை நிறைவேறியுள்ளது. நான் பி.காம் படித்து ஆடிட்டர் ஆக விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டிரெச்சரில் வந்தார்

அஸ்மத்துல்லாவை வீட்டில் இருந்து 4 பேர் காரில் ஏற்றிக்கொண்டு தேர்வு மையத்துக்கு வருகின்றனர். அங்கு காரில் இருந்து அவரை ஸ்டிரெச்சரில் தூக்கிக் கொண்டு தேர்வு எழுதும் அறைக்கு வந்து உட்கார வைக்கிறார்கள். பின்னர் அவர் ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதுகிறார். தேர்வு முடிந்ததும் சக மாணவர்கள் காரில் ஏற்றிவிட வீடு திரும்புகிறார்.

விபத்தில் சிக்கியும் மனம் தளராமல் தேர்வு எழுதிய அவரை சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டினார்கள். அவர் தேர்வு எழுத உதவும் ஆசிரியர் எஸ்தர் பிரேமா ராயபுரம் சி.எஸ்.ஐ. நார்த்விக் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர். 

மேலும் செய்திகள்