அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு தடை: வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு கொலை மிரட்டல்
சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
சென்னை,
வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. இதனால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் இருந்து தொடர்ந்து எனக்கு மிரட்டல் வந்துக் கொண்டே இருக்கிறது. நேற்று (முன்தினம்) இரவு கூட சில மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன்’ என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘வழக்கை தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். பின்னர், ‘இந்த ஐகோர்ட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு எதிராக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு எதிராகவும், விவசாய நிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக சட்டவிரோதமாக மாற்றுவதற்கும் எதிராகத்தான் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் தகுந்த முடிவினை எடுக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து கூறினார்கள்.