சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்ற நாடார் சமுதாயம் பற்றிய பிரச்சினைக்குரிய பாடம் நீக்கப்பட்டது; அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நாடார் சமுதாயம் பற்றிய பிரச்சினைக்குரிய பாடம் நீக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர். நாடார் சமுதாயம் குறித்து பிரச்சினைக்குரிய பாடம் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அங்கீகாரம் பெற்று 19 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்த பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், பாடத்தையும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தயாரிக்கிறது.

Update: 2016-12-21 19:36 GMT
சென்னை,

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நாடார் சமுதாயம் பற்றிய பிரச்சினைக்குரிய பாடம் நீக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

நாடார் சமுதாயம் குறித்து பிரச்சினைக்குரிய பாடம்

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அங்கீகாரம் பெற்று 19 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்த பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், பாடத்தையும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தயாரிக்கிறது.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தியன் காலனி ஆதிக்கம் என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அந்த பாடப்புத்தகத்தின் 168-வது பக்கத்தில் நாடார் சமுதாயம் குறித்து பிரச்சினைக்குரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தலைவர்கள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட தவறான தகவல்களை நீக்கவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

பிரச்சினைக்குரிய பாடத்தை நீக்கவேண்டும் என்று முதல் -அமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதா முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

நாடார் சமுதாயம் குறித்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவல்களை அகற்றவேண்டும் என்று சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி ஆராய்ச்சி குழு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பிரச்சினைக்குரிய பகுதியை நீக்கி உத்தரவு

நாடார் சமுதாயம் குறித்த பிரச்சினைக்குரிய அந்த பகுதியை நீக்கியும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. நிறுவனம் தனது இணையதளத்தில் அனைத்து சி.பி.எஸ்.இ. தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பிரசுரித்து உள்ளது. அந்த பாடத்தின் 168-வது பக்கத்தில் சாதி முரண்பாடு- ஆடை விவகாரம் பற்றிய தலைப்பின் கீழ் பாடம் தரப்பட்டுள்ளது. அந்த பக்கம் முற்றிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து எந்த வினாவும் தேர்வுக்கு கேட்கப்படாது. இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 9-ம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்கமாட்டார்கள்

இது குறித்து சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி முதல்வர் ராதிகா கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் இருந்து அதன் இணையதளத்தில் சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதை பார்த்தோம். 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 168-வது பக்கத்தில் உள்ள பாடத்தை எங்கள் பள்ளி ஆசிரியர்கள் யாரும் நடத்தமாட்டார்கள். மாணவ-மாணவிகளும் அதை படிக்கமாட்டார்கள். அதற்காக சம்பந்தப்பட்ட பக்கத்தை நாங்கள் கிழிக்கமாட்டோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடார் சமுதாயம் பற்றிய பிரச்சினைக்குரிய பாடம் நீக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இடம் பெற்றிருந்த பாடத்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. காலம் தாழ்த்தப்பட்ட நடவடிக்கை என்றாலும் இது வரவேற்கத்தக்கது.

9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில், திருவாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய விடுதலைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நான் தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். அதைத்தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தினார்கள்.

பா.ம.க.வுக்கு வெற்றி

நாடார் சமுதாயங்களின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் பா.ம.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, 9-ம் வகுப்பு பாடநூலில் இருந்து நாடார்களை அவதூறு செய்யும் பாடத்தை நீக்க ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பாடப்பிரிவு நீக்கப்பட்டிருப்பது பா.ம.க. முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழர் விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்திய அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநில பாடத்திட்ட நூல்களில் ஒரு பாடமாக மத்திய, மாநில அரசுகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்.ஆர்.தனபாலன்

மத்திய அரசின் 9-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களாக காலம் காலமாக வாழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்கள் பிழைப்பு தேடி வந்த வந்தேறிகள் என்றும், திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த நாடார் சமுதாய மக்கள் அடிமைகளாகவும், பெண்கள் மார்பு சேலை அணிய மாட்டார்கள் என்றும் தவறான பாடப்பகுதியை பதிவு செய்திருந்தது. இதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதோடு அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறையை டெல்லியில் சந்தித்து பாடப்பகுதியை நீக்க கோரிக்கை வைத்தோம்.

இந்த இழிவான பாடப்பகுதியை நீக்க உறுதுணையாக செயல்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல் முதலாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, நாடார் மக்களின் உணர்விற்கு மதிப்பளித்த டாக்டர் ராமதாஸ், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை உள்ளிட்ட அனைவருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கொங்குநாடு ஜனநாயக கட்சி

கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடார் சமுதாயத்தின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை வரவேற்கிறோம். பாடத்தை நீக்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சி.பி.எஸ்.இ. பாடத்தில் நாடார் சமுதாயத்தை பற்றிய குறிப்பிட்ட பகுதியை நீக்க அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்‘ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்