2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பா?; பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து

2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றி பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-20 19:20 GMT

பண்டமாற்று முறையில் இருந்து பணப்பரிமாற்றத்துக்கு வந்த பிறகு, பணம்தான் பெரும்பாலானோரின் தேடுதலாக உள்ளது. சிலர் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைப்பதால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதை தடுக்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் அதிகளவு புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாளடைவில் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவை திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு எந்த வகையிலாவது பாதிப்பு ஏற்படுமா? என்பது எல்லாம் விரைவில் தெரியவரும்.

இதுகுறித்து வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

ஏற்கனவே எதிர்பார்த்தது

ஓய்வு பெற்ற வேளாண்மை துறை துணை இயக்குனர் ராஜா ரவிச்சந்திரன்:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு சரியானதுதான். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். ஏற்கனவே மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து இருந்தது. 3, 4 மாதங்களுக்கு முன்பாகவே பலர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து விட்டனர். எனவே ஏழை, எளிய, பாமர மக்கள் கையில் ஓரிரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் அவற்றை வங்கிகள் உடனே மாற்றிக் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் பயத்தை போக்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்பை ஏற்படுத்தாது

பாளையங்கோட்டையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் நிறுவன மேலாளர் ரெக்ஸ்:-

கடந்த 2016-ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. அப்போதே பொதுமக்கள், இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்றாவது ஒரு நாள் மதிப்பிழப்பு செய்யப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர். அதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைத்தால் அதை உடனடியாக சில்லறை நோட்டுகளாக மாற்றி விடுவார்கள்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு தற்போது நடந்துள்ளது. ஆனால் பொதுமக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கும். மேலும் வங்கிகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு வழங்குவதை குறைத்து விட்டனர். அதனால் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

வரவேற்கத்தக்கது

பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தென்றல் பாலு:-

நான் தனியார் சிட்பண்ட் நடத்தி வருகிறேன். கிராமங்களில் என்னிடம் பொதுமக்கள் வரவு-செலவு வைத்து வருகின்றனர். நான் ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்து வருகிறேன். முன்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தபோது அதிகமாக புழக்கத்தில் இருந்தது. சமீப காலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மிகவும் குறைவாக வருகிறது. இதனை நிறுத்தியதை வரவேற்கிறேன். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு தான் இதில் கஷ்டம் உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அந்த பணம் வெளியே வரும். இதில் சாதாரண பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும், கஷ்டமும் இல்லை.

தென்காசியை சேர்ந்த சைரஸ்:-

நீண்ட நாட்களாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவாகவே புழக்கத்தில் உள்ளது. நான் அந்த நோட்டை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் உள்ளிட்டோரிடம் தான் இந்த ரூபாய் நோட்டுகள் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று முன்னறிவிப்பு கொடுத்தது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அந்த பணத்தை வைத்திருக்கும் ஒரு சிலரும் அதனை மாற்றிக் கொள்வார்கள். அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் அதை மாற்றும்போது சற்று சிரமம் ஏற்படலாம்.

கீழப்பாவூரைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி முருகன்:-

நான் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ரூ.12 கோடி வரை பண பரிவர்த்தனை செய்து வருகிறேன். பணத்தை வங்கியிலேயே டெபாசிட் செய்து ஆன்லைன் மூலமோ அல்லது காசோலை மூலமோ மாற்றி இந்த பரிவர்த்தனை நடக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான கணக்கு வைத்து தொழில் செய்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதில் எவ்வித பாதிப்பும் இல்லை.

ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மளிகை கடைக்காரர் குமரகுருபரன்:-

எட்டயபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்கிறார்கள். பொதுமக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இல்லை. பொருட்கள் வாங்க வருபவர்கள் ரூ.500, ரூ.200 ஆகியவற்றை தான் பெரும்பாலும் கொண்டு வருகின்றனர். நாங்கள் பொருட்கள் கொள்முதல் செய்யக்கூடிய நிறுவனங்களில் கூட ஒரு சில 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் உள்ளன.

திருச்செந்தூரை சேர்ந்த நா.வேலம்மாள் கூறியதாவது:-

ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அதிகளவில் புழக்கத்தில் இல்லை. கையில் இருக்கும் ரூபாய் நோட்டை குறிப்பிட்ட தேதிக்குள் எளிதாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்வார்கள். அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட போவது இல்லை. இந்த அறிவிப்பால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

இணையவழி பணபரிவர்த்தனை

நெல்லை டவுனை சேர்ந்த பிரியங்கா மகேஷ்:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பார்த்து பல மாதங்கள் ஆகிறது. எனவே 2 ஆயிரம் ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் பாமர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும் நாட்டில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 7 லட்சம் கோடி அச்சடிக்கப்பட்டதில் பாதிதான் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது என்றும் சொல்கிறார்கள். எனவே, மக்களுக்கு பயன்படாத அந்த ரூபாய் நோட்டு தேவையில்லை என்பது உண்மைதான். கடந்த 5 ஆண்டுகளில் இணையவழி பண பரிவர்த்தனை வளர்ந்து விட்ட சூழலில், மக்களுக்கு பயன்படுவது சில்லறை பணம் மட்டுமே. 1,000 ரூபாய் நோட்டை ஒழித்து விட்டு, ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வந்தார்கள் என்ற கேள்விக்கு விடையில்லை. மக்களை இப்படி மீண்டும் மீண்டும் குழப்புவது தவறு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்