சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பஸ்களை இயக்க வேண்டும் - மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை
சென்னையில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பஸ்களை இயக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.;
பள்ளி மாணவர்கள் மாநகர பஸ்களின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கி செல்வதை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் எந்தெந்த வழித்தடத்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 12 வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. இந்த வழித்தடங்களில் கூடுதலாக 20 மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை 15 புதுமையான திட்டங்களையும் போலீசார் புகுத்த உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன பதிவெண்ணை தானாகவே படம் பிடித்து, வாகன உரிமையாளருக்கு அபராதம் சலான் அனுப்பி வைக்கும் (டிராஸ்) திட்டம் அண்ணாநகரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் 7 ஆயிரம் சலான்கள் விதி மீறல் வாகன ஓட்டி உரிமையாளர்களுக்கு டிராஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டம் ஸ்பென்சர், மின்ட் சந்திப்பு உள்பட மேலும் 3 இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
மேலும், கூகுள் கண்காணிப்பு அமைப்பு மூலம் போக்குவரத்தின் நேரலை நிலையை அறிந்து அதனை கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளது.
10 ஆண்டு நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. களப்பணிக்காக நியமிக்கப்பட்ட போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் உள்ளார்களா? என்பது இ-பீட் செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அதுமட்டும் அல்லாமல் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து அதை தடுக்க நெடுஞ்சாலை துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறையினருடன் ஒருங்கிணைந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தனிக்குழு அமைத்துள்ளனர்.
அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், சாலைகளை மேம்படுத்தவும், மேலும் செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்குழுவானது ஆலோசித்து வருகிறது. வாகன நெரிசலை குறைக்கும் வகையில் பல சாலைகள் ஒருவழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் நலனை காக்க 7 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2020-ல் 18 லட்சத்து 69 ஆயிரத்து 316 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.21 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2021-ல் 21 லட்சத்து 2 ஆயிரத்து 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.20 கோடியே 6 லட்சத்து 81 ஆயிரத்து 620 வசூலானது.
2022-ல் 22 லட்சத்து 94 ஆயிரத்து 823 வழக்கு பதியப்பட்டு ரூ.28 கோடியே 97 லட்சத்து 46 ஆயிரத்து 750 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022-ல் 44.38 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020-ல் 559 விபத்துகளில் 575 உயிரிழப்புகளும், 2021-ல் 566 விபத்துகளில் 573 இறப்புகளும், 2022-ல் 499 விபத்துகளில் 507 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 2021-ஐ ஒப்பிடுகைளில் கடந்த ஆண்டில் 11.52 சதவீத விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் விபத்துகளும் 11.84 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.