சிலம்ப ஆசிரியர், மாணவியை தாக்கி செல்போன் பறித்த வழக்கில்கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிலம்ப ஆசிரியர், மாணவியை தாக்கி செல்போன் பறித்த வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-04-25 21:28 GMT

ராமநத்தம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கேசவலு நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). சிலம்ப பயிற்சியாளரான இவர் சம்பவத்தன்று தனது நண்பரின் 13 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். சேப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மாணவி மற்றும் குணசேகரனை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் கொலுசை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் அருகே பரவலூரை சேர்ந்த விஷ்வா (25), விருத்தாசலம் இந்திரா நகர் கபருதீன் (23) ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் வேப்பூர், விழுப்புரம் டவுன், முத்தாண்டிக்குப்பம், விருத்தாசலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளன. அதனால் அவர்களது தொடர் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஷ்வா, கபருதீன் ஆகியோரிடம், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்