தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-24 00:40 IST

தாலி சங்கிலி பறிப்பு

அரியலூர் ராஜாஜி நகர் பி.கே. காலனியை சேர்ந்த பொன்சேகரின் மனைவி பொன்ராணி. இவர் கடந்த 18-ந்தேதி தனது ஸ்கூட்டரில் ஓ.கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதில் ஸ்கூட்டரில் இருந்து பொன்ராணி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்ராணி அரியலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் பிடித்தனர்

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், அரியலூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் நேற்று காலை பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாகுளம் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ் (வயது 22), பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜீத் (19) என்பது தெரியவந்தது.

நகைகள் மீட்பு

மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பொன்ராணியின் தாலி சங்கிலியை பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், சேலத்தில் ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேஷ், அஜீத்தை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர். குறுகிய காலத்தில் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்