கோவில் உண்டியலை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்

கணியம்பாடி அருகே கோவில் உண்டியலை திருடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update:2023-05-16 17:17 IST

உண்டியல் திருட்டு

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த நாகநதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. அந்த வழியாக பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள், வாகனங்களை நிறுத்தி அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் காளியம்மன் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கோவில் உண்டியலை உடைத்து திருடிவிட்டு, மற்றொரு காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியல்களை உடைக்க முயன்றனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது 3 பேர் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட கிராமத்தினர் ஓடி வருவதை பார்த்த திருடர்கள், அங்கிருந்த தோட்டத்திற்குள் தப்பிஓட முயன்றனர். விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி சென்றுவிட்டார்.

தர்ம அடி கொடுத்தனர்

பிடிப்பட்ட 2 பேருக்கும் பொதுமக்கள் சரமாரியாக தர்மடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் வேலூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 19), பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மலைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த கரன் என்பவரை தேடி வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்