கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் போன்றவை கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் நேற்று அதிகாலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றார். மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் சென்ற போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். பின்னர் அந்த காரை சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புகாடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.