தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்கள் அவதி தெருநாய்களை கட்டுப்படுத்த 2 கருத்தடை மையங்கள்

தாம்பரம் மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த 2 கருத்தடை மையங்கள் இயங்கி வருவதாக மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2022-12-07 08:41 GMT

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருமளவு பெருகி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தெரு நாய்களால் கடிபடுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகரில் சமீர் என்ற பள்ளி மாணவனை தெரு நாய் கடித்ததில் காலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தெரு நாய் கடிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில்,

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்லாவரம் மற்றும் செம்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் அதற்கான பிரத்யேக விலங்குகள் கருத்தடை மையங்கள் உள்ளன.

அறுவை சிகிச்சை மையங்களுடன் கூடிய பிரத்யேக மையங்களில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அனைத்துமே இந்திய விலங்குகள் வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற அமைப்புகள் ஆகும்.

சிகிச்சை முடித்து அதற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு எங்கு அந்த தெரு நாய்களை பிடித்தோமோ அங்கே மீண்டும் கொண்டு விடப்படுகிறது. தற்போது அதிக எண்ணிக்கையில் புகார் வரும் காரணத்தினால் மேலும் ஒரு விலங்கு கருத்தடை மையம் அமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெரு நாய் குறித்து பிரச்சினை ஏதாவது இருந்தால் தாம்பரம் மாநகராட்சியின் 1800 42543 55 கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்