இஸ்ரேலில் இருந்து திருச்சி வந்த 2 ஆராய்ச்சி மாணவர்கள்
இஸ்ரேலில் இருந்து 2 ஆராய்ச்சி மாணவர்கள் திருச்சி வந்தனர்.;
இந்தியர்கள் மீட்பு
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு சார்பில் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலமாக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இந்திய பயணிகள் நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லி வந்தடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நேற்று காலை 6 மணிக்கு வந்தனர்.
அவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு கார் மூலம் தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களான திருச்சி கருமண்டபம், திருநகரை சேர்ந்த பழனியப்பன் (வயது 24) மற்றும் உறையூர் பகுதியை நேர்ந்த குருச்சரண் (29) ஆகியோர் திருச்சிக்கு கார் மூலம் பத்திரமாக வந்தடைந்தனர். அவர்களை, அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். மேலும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
பதற்றமான சூழ்நிலை
இது குறித்து கருமண்டபம் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பழனியப்பன் கூறுகையில், நான் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் உயிரி தொழில்நுட்பம் படித்து முடித்து, இஸ்ரேலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் புற்றுநோய் உயிரியியல் ஆராய்ச்சி படிப்பு படிக்க கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்றேன். அங்கு ரிகோவார்ட் பகுதியில் தங்கிப்படித்து வந்தேன். இஸ்ரேலில் நான் தங்கியிருந்த இடத்தில் போர் நடக்கவில்லை. இஸ்ரேலில் வடக்கு, தெற்கு பகுதிகளில் போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அங்கு தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மேல்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். இஸ்ரேல் அரசு எங்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தி கொடுத்தது. இந்திய அரசு அங்கிருந்து எங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வந்தது. எங்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.