வக்கீல் வீட்டில் ரூ.26 லட்சம் திருட்டு டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருவேற்காட்டில் வக்கீல் வீட்டில் ரூ.26 லட்சம் திருடிய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-16 08:30 GMT

திருவேற்காடு,

திருவேற்காடு, வி.ஜி.என் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 60). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் வெற்றிச்செல்வத்திற்கு திருவள்ளூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெற்றிச்செல்வன் ஸ்ரீதரிடம் தனக்கு கார் ஓட்ட டிரைவர் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் செவ்வாய்பேட்டை, தொழுவூர்குப்பம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (45), என்பவரை வெற்றிசெல்வனுக்கு டிரைவர் வேலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிசெல்வன், டிரைவர் கஜேந்திரனுடன் காஞ்சீபுரத்திற்கு காரில் சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். பின்னர் வெற்றிச்செல்வன் வீட்டிலேயே கஜேந்திரனும் தங்கினார். மறுநாள் வெற்றிசெல்வன் எழுந்து பார்த்தபோது கஜேந்திரனை காணவில்லை. மேலும் வீட்டில் பூஜை அறையில் ரூ.26 லட்சம் பணத்துடன் இருந்த லாக்கர் பெட்டியும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெற்றிச்செல்வன் திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் கஜேந்திரன் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த கஜேந்திரனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் வெற்றிச்செல்வன் வீட்டில் ரூ.26 லட்சத்தை பணத்தை திருடிக்கொண்டு சென்றதாகவும் பின்னர் அதிலிருந்து ரூ.5 லட்சம் பணத்தை ஸ்ரீதருக்கு கொடுத்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் ஸ்ரீதரையும் பிடித்து இருவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்