ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2022-09-23 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மார்டின் ராபர்ட் தலைமையிலான போலீசார், கடந்த 8.8.2019 அன்று விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த 2 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது ஒவ்வொரு மூட்டையிலும் 11 கிலோ வீதம் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேட்டத்தூரை சேர்ந்த ஏழுமலை(வயது 35), செல்லான்(60) என்பதும், இருவரும் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி ரெயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தபோலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலை, செல்லான் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பராயலு ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்