மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மது விற்பவர்களை கைது செய்வதாக மங்களமேடு போலீசார் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் முருக்கன்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் சுப்பிரமணியன்(வயது 50), எழும்பூர் செல்லும் சாலையில் காட்டு கொட்டகையில் தனகராஜ்(49) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.