வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வாலிபர் சாவு
ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி யாதவர் தெருவை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 26). இவர் அரண்மனையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அரண்மனை கடைக்கு சென்று பழங்களை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் லெட்சுமிபுரம் ஊருணி கரை பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வேல்முருகனின் தந்தை செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சிவநேசன் (22). இவர் திருவாடானை தாலுகா எம்.வி.பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சாப்பாடு வாங்க தொண்டிக்கு சென்றுள்ளார். அப்போது நம்புதாளை காசியப்பா ஊருணி அருகே சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் காயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்த தொண்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.