திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாலிபர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடி நடவடிக்கையாக அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் திருத்தணி பழைய தர்மராஜா கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை மடக்கி படித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிய வந்தது.
பின்னர் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருத்தணி ஒன்றியம் பாப்பிரெட்டி பள்ளி ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.