வண்ணாரப்பேட்டையில் 50 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
வண்ணாரப்பேட்டையில் 50 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மதியம் வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வண்ணாரப்பேட்டை எஸ்.என்.செட்டி தெரு ஜீரோ கேட் சந்திப்பில் கையில் பைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்கும் 2 பேர் திரிவதை கண்டு போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களைப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அர்லே மணிகண்டா (வயது 22) மற்றும் போத்ராஜ்ஷேசு (32) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று பாடி மேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் போரில் வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்திய காளியப்பனை (வயது 43) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைபோல வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கஞ்சாவுடன் சுற்றிய அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் (24) என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.