அரிசி ஆலையில் திருடிய 2 பேர் கைது

களம்பூரில் அரிசி ஆலையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.

Update: 2023-04-19 13:16 GMT

களம்பூரில் அரிசி ஆலையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.

அரிசி ஆலையில் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர், சந்தவாசல் ரோட்டை சேர்ந்தவர் பரணி (வயது 42). இவரது அண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் 2 மாதங்களாகவே ஏந்துவாம்பாடி சாலையில் உள்ள பரணிக்கு சொந்தமான அரிசி ஆலை மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பரணி அரிசி ஆலைக்கு சென்றார். அப்போது மின் மோட்டார்கள், சுமார் 500 கிலோ எடை கொண்ட இரும்பு உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து களம்பூர் போலீசில் பரணி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

2 பேர் கைது

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், களம்பூர் குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (39), நாகராஜ் (23), ராஜவேலு (21) ஆகிய 3 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், ஆனந்தன், நாகராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான ராஜவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்