பெரியார் சிலையை அவமதித்த 2 பேர் கைது

நெகமம் அருகே பெரியார் சிலையை அவமதித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-27 01:30 IST

நெகமம்

நெகமம் அருகே பெரியார் சிலையை அவமதித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் சிலை அவமதிப்பு

கோவை மாவட்டம் நெகமம் அருகே வடசித்தூர் உள்ளது. இங்கு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை அப்பகுதி மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி அதிகாலை பெரியார் சிலை மீது மாட்டு சாணம் தெளிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரவில் மர்ம நபர்கள் யாரோ சிலை மீது மாட்டு சாணத்தை தெளித்து அவமதிப்பு செய்தது தெரியவந்தது. இதை அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டு, பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த நெகமம் போலீசார் விரைந்து சென்று பெரியார் சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

2 பேர் கைது

இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று வடசித்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடசித்தூர் மேட்டுக்கடை பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்கிற ராஜா (வயது 25), வடசித்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ரகுபதி என்பவரது மகன் கோகுல் (24) ஆகியோர் என்பதும், பெரியார் சிலை மீது மாட்டு சாணம் தெளித்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்