ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

நெல்லை ரெயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-02 18:45 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று காலையில் சந்திப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலைய பார்சல் பிரிவு அறையின் முன்பு சுமார் 2 மணி நேரமாக கேட்பாரற்று 6 சாக்கு மூட்டைகள் கிடந்துள்ளன. அதில் ரெடிமேட் துணி என்று எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த சாக்கு மூட்டைகளில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, "பெங்களூருவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த இந்த புகையிலை பொருட்களை ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்த மர்மநபர், அங்கு போலீஸ் இருப்பதை பார்த்து பயந்து அந்த மூட்டைகளை பார்சல் பிரிவு அறையின் முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளார்.

அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்